IPL 2020 அபுதாபி: கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி !
அபுதாபி: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் மும்பை அணி மாஸ் ஆட்டம் ஆடியுள்ளது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.
அதன்பின் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
மும்பை அணி:
மும்பை அணியில் ரோஹித் சர்மா, டீ காக், சூர்யா குமார் யாதவ், திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, பேட்டின்சன், ராகுல் சார், டிரெண்ட் போல்ட் , பும்ரா ஆகியோர் உள்ளனர். இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து மும்பை அதிரடியாக ஆடியது. டிகாக் மட்டும் 1 ரன் எடுத்தார். ஆனால் அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதன்பின் ரோஹித் சர்மாவும் கொல்கத்தா பவுலிங்கை விளாசித் தள்ளினார்.
54 பந்தில் 6 சிக்ஸ் 3 பவுண்டரி என்று 80 ரன்கள் எடுத்தார். பேட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், ரசல் என்று எல்லோரின் ஓவரையும் ரோஹித் வெளுத்து காட்டினார். கொல்கத்தா போட்ட எந்த திட்டமும் மும்பைக்கு எதிராக வேலை செய்யவில்லை. முக்கியமாக பேட் கம்மின்ஸ் பவுலிங் சுத்தமாக வேலையை செய்யவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை 195 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு மும்பை 196 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.
கொல்கத்தா அணி:
அதன்பின் ஆடிய கொல்கத்தா தொடக்கத்தில் இருந்து மோசமாக திணறியது. முதல் ஓவரில் ஒரு ரன் கூட செல்லவேயில்லை. அதன்பின் வெறும் 7 ரன்களில் சுப்மான் கில் அவுட்டானார். சுனில் நரேன் 9 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் வந்த தினேஷ், ராணா சிறிது நேரம் ஆடினார்கள். ஆனால் இவர்களும் 30, 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
கொல்கத்தா தோல்வி:
அதன்பின் இயான் மோர்கன், ஆண்ட்ரு ரசல் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களும் 16 மற்றும் 11 ரன்களுக்கு அவுட்டானார்கள். இதையடுத்து கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
இறுதியில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.