Friday, October 17, 2025
NationalTravel

அபுதாபிக்குள் நுழைய புதிய விதிமுறைகள் – நவம்பர் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது !

அமீரகத்தில் இருந்து அபுதாபிக்கு வரும் பயணிகள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை (PCR Negative) வைத்திருந்தால் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய முடியும் என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு அவ்வாறே தற்பொழுது வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், துபாய்-அபுதாபி எல்லை பகுதியான கன்தூத் (Ghantooth) பகுதியில், அபுதாபி வரும் பயணிகளின் கொரோனா தொற்று சோதனைக்காக DPI சோதனை மையமும் அமைக்கப்பட்டது.

இன்று (நவம்பர் 4, புதன்கிழமை), கொரோனா தொற்றுநோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக் குழு, அபுதாபிக்குள் நுழைவதற்கான விதிமுறைகளில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் 8 ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்:

  • கொரோனா தொற்றுக்கான சோதனை (PCR அல்லது DPI) எடுக்க வேண்டும்.
  • அபுதாபிக்குள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் பெற்ற 48 மணி நேரத்திற்குள் நுழைய வேண்டும்.
  • அபுதாபியில் தொடர்ந்து 4 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்தால் அபுதாபிக்குள் நுழைந்த நான்காவது நாளில் PCR டெஸ்ட் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
  • அபுதாபியில் தொடர்ந்து 8 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் போது, அபுதாபிக்குள் நுழைந்த எட்டாவது நாளில் மீண்டும் ஒரு PCR டெஸ்ட் கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

அபுதாபிக்குள் நுழையும் நாள் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 6 ஆவது நாள் மேற்கொள்ளும் PCR டெஸ்ட் வரும் 8 ம் தேதி முதல் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . 4 மற்றும் 8 ஆம் நாட்களில் PCR டெஸ்ட் எடுக்கத் தவறியவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.