Friday, October 17, 2025
TN News

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை !

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். திருத்தணி பஸ்நிலையம், முருகன் கோவில், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். திருத்தணி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து வருகின்றனர். அது பொதுமக்கள் உபயோகத்திற்கு வர இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.