அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் OCI அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இனி பழைய பாஸ்போர்ட் தேவையில்லை..இந்தியத் தூதரகம் அறிவிப்பு !
அபிதாபியில் உள்ள இந்தியத் தூதரகம், வெளிநாடுவாழ் இந்தியருக்கான அட்டை (OCI Card) வைத்திருப்போர் இந்தியா செல்வதற்கான பயண நடைமுறைகளை இந்திய அரசு எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இந்தியாவிற்கு பயணம் செய்யும் OCI அட்டைதாரர்கள் தங்களுடைய OCI கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள பழைய பாஸ்போர்ட்டை இனி எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும் புதிய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும்” என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், OCI கார்டுகளைப் புதுப்பிக்க தேவையான கால அளவையும் அதிகரித்திருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், OCI கார்டுகளை புதுப்பிக்க விரும்புவோர் 31.12.2021 தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.