Monday, March 2, 2026
World

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனாத் தொற்று..அந்நாட்டு அரசு அறிவிப்பு !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவருக்கு கோவிட் பாசிட்டிவ் என்று வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கான் “தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்று அமைச்சர் பைசல் சுல்தான் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவருடன் தொடர்பு கொண்ட மற்றவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்களா என்பது குறித்து மேலதிக விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை.

68 வயதான இம்ரான் கான் சமீபத்தில் அடிக்கடி பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வந்தார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டிலும் கூட கலந்து கொண்டார்.

மேலும், மாநாட்டில் உரையாற்றிய அவர், ஏழை மக்களுக்கான வீட்டுத் திட்டத்தைத் தொடங்க மற்றொரு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், இம்ரான் கான் வியாழக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,876 பேர் கொரோனா பாசிட்டிவ் பெற்றுள்ளனர். ஜூலை தொடக்கத்தில் இருந்து தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இதுவரை 6,20,000 க்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 42 பேர் இறந்துள்ளதால், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,799 ஆக உள்ளது.

வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு மார்ச் 10 முதல் தொடங்கியது.

சீன சினோபார்ம் மற்றும் கேன்சினோபயோ, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் பாகிஸ்தானில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.