ஷார்ஜா- IPL 2020: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !
ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2020 ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் நான்காவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது.
ராஜஸ்தான் பேட்டிங்:
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி அதிரடி ஆட்டம் ஆட விருப்பம் இல்லாமல் அதிர்ச்சி அளித்து தோல்வி அடைந்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் அபாரமாக பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் தன் அறிமுகப் போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும்,சஞ்சு சாம்சன் – ஸ்டீவ் ஸ்மித் சிஎஸ்கே பந்துவீச்சை பந்தாடினர்.
சஞ்சு சாம்சன் 9 சிக்ஸர்கள் அடித்து 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதன் பின் விக்கெட்கள் சரிந்தன. 19 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 186 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்கள் இழந்து இருந்தது.
20வது ஓவரில் லுங்கி நிகிடி வீசிய முதல் நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் அடித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். அதில் இரண்டு நோ பால் வேறு. அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது.
சென்னை பேட்டிங்:
அடுத்து ஆடிய சிஎஸ்கே அணிக்கு முரளி விஜய் – ஷேன் வாட்சன் நிதானமாக துவங்கி அதிரடி துவக்கம் அளித்தனர். வாட்சன் 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பாப் டுபிளெசிஸ் நிதான ஆட்டம் ஆடினார்.
நான்காம் வரிசையில் சாம் கர்ரன் இறங்கி 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து 6 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார். தன் அறிமுகப் போட்டியில் ஆடிய ருதுராஜ் டக் அவுட் ஆனார். அடுத்து பாப் டுபிளெசிஸ் – கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர்.
இவர்கள் இருவரும் ஓவருக்கு 8 ரன்கள் என்ற ரன் ரேட்டையே தொடர்ந்தனர். அதிலும் பாப் டுபிளெசிஸ் பவுண்டரி அடிக்கும் ஆர்வமே இன்றி நடந்து கொண்டார். ஜாதவ் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் பாப் டுபிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை காட்டினார்.
அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தோனி ஏழாவது பேட்ஸ்மேன் ஆக வந்து கடைசி நேரத்தில் சிக்ஸ் அடிக்காமல் சிங்கிள் ரன்கள் மட்டுமே எடுத்து வந்தார். சிஎஸ்கே அணியில் டுபிளெசிஸ் முதலில் நிதான ஆட்டம் ஆடியது, தோனி நிதான ஆட்டம் ஆடியது அந்த அணி வெற்றி பெற முயலவில்லை என்பதை வெளிப்படையாக காட்டியது.
கடைசி ஓவரில் 37 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது தோனி அந்த ஓவரில் 3 சிக்ஸ் அடித்து இலக்கை நெருங்கினார். சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் இழந்து 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் வெற்றி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன் முதல் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. அந்த அணியின் ராகுல் திவாதியா 3 விக்கெட் எடுத்து அசத்தினார். சிஎஸ்கே அணியின் தோல்விக்கு அவரும் முக்கிய காரணம்.