கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் மட்டுமே மதீனா பள்ளிக்குள் நுழைய அனுமதி ! சவூதி அரேபியா அறிவிப்பு !
புனித நகரமான மதீனாவில் உள்ள நபி (ஸல்) மசூதிக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அல்லது நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வழிபாட்டாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சவுதி அரேபிய அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
அரபு பத்திரிகை செய்தியின்படி, “புனித ரமலான் மாதத்தில் வழிபாட்டாளர்களிடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இப்புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பதை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்” என்று அறிவித்துள்ளது.
மேலும், மசூதியில் வழிபடுவதற்கான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை அதிகாரிகள் முன்பே அறிவித்திருந்தனர். சவூதி பத்திரிகை அமைப்பின் கூற்றுப்படி, கிராண்ட் மசூதி மற்றும் நபி (ஸல்) மசூதியின் விவகாரங்களுக்கான பொதுத் தலைவர் அப்துல் ரஹ்மான் அல் சுதேய்ஸ், சனிக்கிழமையன்று மதீனாவில் நபி (ஸல்) மசூதி அல்லது மஸ்ஜித்-உன்-நபவியில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 60,000 வழிபாட்டாளர்கள் வரை வழிபடமுடியும் என்று கூறினார்.
சவூதி அதிகாரிகளின் கூற்றுப்படி, தாராவீஹ் தொழுகைக்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு நபி (ஸல்) மசூதி மூடப்பட்டு அதிகாலை தொழுகையான ஃபஜர் தொழுகைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே திறக்கப்படும்.
புனித ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டுமே இந்த மசூதி நாள் முழுவதும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.