அமீரகம்: ரமலான் முதல் நாள் இன்று ஆரம்பம்…சமூக இடைவெளியைப் பின்பற்றி முஸ்லிம்கள் மசூதிகளில் தராவீஹ் தொழுகை !
அமீரகத்தில் இன்று புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகிறது. அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கொரோனாவிற்கு மத்தியில் சமூக இடைவெளியுடன் கூடிய புனித ரமலான் மாதத்தை இன்று இரண்டாவது ஆண்டாகத் தொடங்குகின்றனர்.
இருப்பினும், அமீரகத்தில் இந்த வருட ரமலான் 2021, கடந்த ஆண்டின் புனித மாதத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. ஏனெனில் இம்முறை ஷாப்பிங் செய்வதற்கு இயக்க கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் எதுவும் இல்லை.
ரமலான் தினத்திற்கு முன்னதாக நேற்று திங்கட்கிழமை இரவு மசூதிகளில் தராவீஹ் என்ற சிறப்புத் தொழுகை முஸ்லிம்களால் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மசூதிகள் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டியிருந்தது.
இருப்பினும், அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளனர். ஒன்றுகூடுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே வீட்டில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்தார் மற்றும் சுஹூர் உணவில் பங்கேற்பதை மட்டுப்படுத்துமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உறவினர்களை சந்திப்பதும் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “உங்கள் பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று துபாயில் உள்ள ஒரு அதிகாரி கூறினார்.
கொரோனா பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்தார் கூட்டங்களைத் தடுக்க சிறப்பு ரோந்துகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்தார் கூடாரங்கள் மற்றும் உணவு விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பாளர்கள் அலுவலகபூர்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து உணவு விநியோகிக்குமாறு கூறப்பட்டுள்ளது.