ராஸ்- அல்-கைமா(RAK): உணவகங்களில் ரமலான் இப்தார் உணவு விநியோகத்திற்குத் தடை !
ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராஸ்-அல்-கைமா காவல்துறை வெளியிட்டுள்ளது.
உணவகங்களுக்குள் அல்லது அதற்கு வெளியிடங்களில் நோன்பாளிகளுக்கு இப்தார் உணவு விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதிகளுக்கு வெளியே இப்தார் கூடாரங்களை அமைக்கவும் மற்றும் வீடுகளுக்கு வெளியே உணவு விநியோகிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
குடியிருப்பு தொழிலாளர் வளாகங்களில் உணவு விநியோகம் அனுமதிக்கப்பட்டநிலையில் அவை இறுக்கமாக மூடப்பட்ட பெட்டிகளிலோ அல்லது பைகளிலோ இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பொது கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும், குடியிருப்பாளர்கள் முகக்கவசங்கள் அணியும்போது இரண்டு மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
“சமையல்காரர்கள் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் அணிவது ஆகியவற்றை சரியான முறையில் பின்பற்றுவதை உணவகங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மானிலும் அனைத்து ரமலான் கூடாரங்களுக்கான அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், புனித ரமலான் மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

