Friday, October 17, 2025
Sports

துபாய் டென்னிஸ் போட்டியில் இருந்து ரோஜர் பெடரர் விலகல் !

தோஹா: கத்தார் ஓபன் 2021 தொடர் நடைபெற்று வரும் நிலையில், காலிறுதிப் போட்டியில் பங்கேற்ற ரோஜர் பெடரர், ஜியார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஸ்விலியிடம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார். தோஹாவில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் 6-3, 1-6 மற்றும் 5-7 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் கடந்த 405 நாட்களாக பங்கேற்காமல் இருந்த பெடரர், இரு தினங்களுக்கு முன்பு தோஹாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் 2021 டென்னிஸ் தொடரின் போட்டியில் பங்கேற்று பிரிட்டன் வீரர் டான் இவான்சை வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோஜர் பெடரருக்கு முட்டியில் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அவர் ஜியார்ஜியா வீரர் நிகோலஸ் பாசிலாஸ்விலியிடம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

நேற்று நடைபெற்ற போட்டி ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றது. 405 நாட்களுக்கு பிறகு அவர் பங்கேற்ற 2வது போட்டி இதுவாகும். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர், இந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அவர் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்று உலகத் தரவரிசையில் 42வது இடத்தில் உள்ள பாசிலாஸ்விலி பாராட்டியுள்ளார்.

ரோஜர் மேலும் கூறுகையில், “தோஹாவில் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். இந்நிலையில், பயிற்சிக்குச் செல்வது சிறந்தது என்று கருதி அடுத்த வாரம் துபாயிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார்.