தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை …மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு !
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகியிருக்கிறதா என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுக் கூட்டம், பிரச்சாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றான முகக் கவசம் அணிவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளிலும் மக்கள் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தற்போது, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அடுத்தடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது என்று அவர் அறிவித்துள்ளார்.