Friday, October 17, 2025
National

ஷார்ஜா: இனி வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களிலும் இலவச பார்க்கிங் வசதி இல்லை…கட்டணத்தை அறிவித்த நகராட்சி !

ஷார்ஜாவில் கிட்டத்தட்ட 6,000 வாகன நிறுத்துமிடங்கள் இப்போது கட்டண மண்டலங்களின் (Paid Zone) கீழ் வந்துள்ளன. அங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் இக்கட்டணம் பொருந்தும் என்று ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது.

வழக்கமாக, வெள்ளி மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டண மண்டலங்களில் பார்க்கிங் இலவசம். இருப்பினும், ஷார்ஜா நகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஆண்டின் அனைத்து நாட்களிலும் 5,857 இடங்களில் பார்க்கிங் கட்டணம் பொருந்தும் என்றும் நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள 579 “ப்ளூ பார்க்கிங் தகவல் பலகைகள்” (“blue parking information boards”) வழியாக வாகன ஓட்டுனர்கள் இத்தகைய பார்க்கிங் மண்டலங்களை அடையாளம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு அனைத்து நேரங்களிலும் பார்க்கிங் இடங்கள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், குடியிருப்பாளர்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அப்போது கூறியிருந்தது. முக்கிய பகுதிகளை கட்டணம் செலுத்தும் பார்க்கிங் முறையின் கீழ் கொண்டு வருவது பார்க்கிங் சிக்கல்களைக் குறைக்கும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் வாகனங்களை நிறுத்துவது கடினம், ஏனென்றால் மக்கள் மற்ற இடங்களிலிருந்து வந்து தங்கள் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்துகிறார்கள்” என்று கூறினார்.