ஷார்ஜா: பள்ளிகளின் தொலைதூர கல்வி(Online Classes) இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு
ஷார்ஜா: தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து நிலைகளுக்கும் தொலைதூரக் கற்றலை (Online Classes) இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு மற்றும் ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 24 வியாழக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID -19 தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.
இந்த இரு குழுக்களும் ஆய்வு செய்து எடுத்த முந்தைய முடிவின் அடிப்படையில் ஷார்ஜா எமிரேட்ஸில் உள்ள தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து கல்வி நிலைகளிலும் உள்ள மாணவர்கள் 2020-2021 கல்வியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் தொலைதூர கற்றலை(Online Classes) மேற்கொண்டது போல அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து இந்த நிலைமையை கண்காணிப்பதாக ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது.