Monday, March 2, 2026
National

வீட்டிலிருந்து பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு ஷார்ஜா அரசு அறிவிப்பு !

ஷார்ஜாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிப்ரவரி 14 முதல் சார்ஜாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு ஷார்ஜா மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து அரசுத் துறைகளுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் சதவீதத்தை அரசு துறைகள் தீர்மானிக்க முடியும் என்றும், பணியிடங்களுக்கு அவசியம் வரக்கூடிய சூழ்நிலையில் உள்ள பணியாளர்களுக்கு இந்நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசுத்துறை இத்தகைய பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இரு பணியாளர்களுக்கு இடையில் குறைந்தது 2 மீட்டர் சமூக இடைவெளி இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொலைநிலை வேலை (Remote Working) செய்ய முடியாதிருக்கும் சமயத்தில், எந்த நேரத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே இருக்கும் வகையில் நிர்வாகத் தலைவர்கள் ஷிப்ட் முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்வது போன்ற அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஊழியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்துக் கூறிய ஷார்ஜா நிர்வாக சபை உறுப்பினரும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவருமான டாக்டர் தாரிக் சுல்தான் பின் காதிம், ஒவ்வொருவரும் கொரோனாவின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.