ஷார்ஜாவின் புதிய பூங்கா ஷீஸ் பார்க் (Shees Park) திறப்பு !
கோர் ஃபக்கான் பகுதியில் உருவாக்கப்பட்ட பூங்கா ஒன்றை ஷார்ஜாவின் ஆட்சியாளரும், உச்ச சபையின் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி (Sultan bin Muhammad Al Qasimi) நேற்று திறந்துவைத்தார்.
ஆட்சியாளரால் திறந்து வைக்கப்பட்ட ஷீஸ் பார்க் (Shees Park) 11,362 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்கே 25 மீட்டர் உயரமுள்ள செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர விளையாட்டு இடம், திறந்தவெளி திரையரங்கம், பார்பேக்யூ பகுதி, 32 நிழல் இருக்கைகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவில் ஒரே நேரத்தில் 70 பேர் தங்களது நேரத்தினை செலவிடலாம்.
ஷார்ஜா: கோர் ஃபக்கான் சாலையில் அமைந்திருக்கும் மலைகளில் மரக்கன்றுகளை ஆட்சியாளர் நட்டார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், ஃபிக் (Fig), எமிராட்டி ஃபிக் (Emirati Fig), மிர்த்லே (Myrtle) மற்றும் போஸ்வேல்லியா கார்டேரி (Boswellia carteri) ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்தந்த மலைப்பகுதிகளில் வளரும் மரங்களின் பெயராலேயே அம்மலைகள் அழைக்கப்படும் எனவும் ஆட்சியாளர் அறிவித்தார்,
கோர் ஃபக்கான் எல்லைக்குட்பட்ட வாதி வஷி பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான சமூக மக்களைக் கொண்டுள்ள நஜ்த் அல் மக்ஸார் (Najd Al Maqsar) கிராமத்தினை ஆட்சியாளர் பார்வையிட்டார்.
தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை புனரமைப்பு செய்யும் திட்டத்தின் அடிப்படையில் இந்த கிராமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியாளர் தெரிவித்தார். ஒரு காலத்தில் நீரோடைகளில் திடீரென வெள்ளம் ஏற்படுகையில் மக்கள் இந்த இடத்திற்கு புகலிடம் தேடி வருவார்கள் என ஆட்சியாளர் தனது அறிவினைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த கிராமத்தில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த 13 வீடுகள் இருக்கின்றன. கிராமத்தின் சிறப்பைப் பறைசாற்றும் வகையில், நினைவுத் தகடு ஒன்றினையும் ஆட்சியாளர் திறந்துவைத்தார். ஆட்சியாளரின் இந்த பயணத்தின்போது, கோர் ஃபக்கான் சாலையில் அமைந்துள்ள ஷீஸ் ஓய்விடங்கள் திட்டத்தினைப் பற்றிப் பேசினார். வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளாக மொத்தம் மூன்று கட்டங்களாக இதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இவை தவிர்த்து தேன், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்கும் 60 கடைகள் இங்கே துவங்கப்பட இருக்கின்றன.
நர்சரி, உணவு ட்ரக் மற்றும் கார்பெட் கடைகள் ஆகியவையும் இங்கே வரவிருக்கின்றன என ஆட்சியாளர் தெரிவித்தார். மேலும், நஜ்த் அல் மக்ஸார் சோலை குறித்தும் தகவல்களைத் தெரிவித்தார்.