இலங்கையில் மார்ச் 29 தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு…கல்வி அமைச்சர் அறிவிப்பு !
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக கடந்த அக்டோபரில் பள்ளிகள் மூடப்பட்ட பின்னர் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மார்ச் 29 அன்று மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, அனைத்து தரங்களுக்கான பள்ளிகளும் மார்ச் 29 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் புதன்கிழமை ஊடக சந்திப்பில் தெரிவித்தார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொற்றுநோயால் மேற்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தேவையான அனைத்து சுகாதார நெறிமுறைகளும் கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.
“மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கான அனைத்து தரங்களையும் மீண்டும் திறக்க உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று இப்போது நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பான சுகாதார பரிந்துரைகளை சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்தார்” என்று அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29 முதல் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை முறையே 90,765 மற்றும் 552 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

