அஜ்மான்: கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக மூன்று மாதங்களில் சுமார் 30 உணவகங்களை மூடிய அதிகாரிகள் !
அஜ்மானில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, பொது சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகளையும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் மீறியதாகக் கண்டறியப்பட்ட 30 உணவு நிறுவனங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின்போது குடிமை அதிகாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிறுவனங்களை கடுமையாக எச்சரித்தனர் என சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை, நகராட்சி மற்றும் திட்டத் துறை அஜ்மான் (MPDA) இயக்குநர் காலித் அல் ஹோசனி தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 3,799 உணவகங்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 139 உணவகங்கள் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டன.
புனித ரமலான் மாதத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உணவுத்துறையின் ஆய்வு இயக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று அல் ஹோசனி கூறினார்.
மேலும், ஆய்வுக் குழுக்களின் வலிமையும் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பை 100 சதவீதம் வரை உறுதிப்படுத்த பயிற்சி அமர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“நாட்டில் இறக்குமதியாகும் சரக்குப்பொருட்கள் அனைத்தும் பொது சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த குடிமை அதிகாரிகள் அஜ்மான் துறைமுகத்தில் உள்ள தங்கள் அலுவலர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்” என்று அல் ஹோசனி மேலும் கூறினார்.