Monday, March 2, 2026
National

அபுதாபி: கொரோனா தடுப்பூசியைப் பெற்ற பயணிகளுக்கான பயண நடைமுறைகள் புதுப்பித்து அறிவிப்பு!

அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு, கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான பயண நடைமுறைகளை புதுப்பித்து அறிவித்துள்ளது.

அமீரகத்தில் மே 3, 2021 திங்கட்கிழமை முதல், கொரோனா தடுப்பூசியைப் பெற்ற கிரீன் லிஸ்ட் நாடுகளிலிருந்து (Green Countries) வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி அவர்களின் வருகை மற்றும் 6 வது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசியைப் பெற்ற பயணிகள் தங்களின் வருகையின் போது ஒரு பி.சி.ஆர் பரிசோதனையையும், ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்துதலையும் மற்றும் நான்காவது நாளில் மீண்டும் ஒரு பி.சி.ஆர் பரிசோதனையையும் எடுக்க வேண்டும்.

இந்த நெறிமுறை, அல்ஹோஸ்ன் (Al-Hosn) பயன்பாட்டின் தடுப்பூசி அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள, குறைந்தது 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது தடுப்பூசியைப் பெற்ற அனைத்து அமீரக குடிமக்களுக்கும், அபுதாபியில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும்.

கிரீன் லிஸ்ட் நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போடாத அமீரக குடிமக்கள் மற்றும் அபுதாபியில் வசிப்பவர்கள், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமின்றி தங்களின் வருகையின்போது ஒரு பி.சி.ஆர் பரிசோதனையையும், 6 மற்றும் 12 ஆம் நாட்களில் மேலும் இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளையும் எடுக்க வேண்டும்.

பிற நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போடாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களின் வருகையின் போது ஒரு பி.சி.ஆர் பரிசோதனையையும், 10 நாட்களுக்கு தனிமைப்படுத்துதலையும், எட்டாவது நாளில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் எடுக்க வேண்டும்.

கிரீன் லிஸ்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள நாடுகளின் பெயர்கள்:

Australia, Bhutan, Brunei, China, Cuba, Greenland, Hong Kong (SAR), Iceland, Israel, Japan, Mauritius, Morocco, New Zealand, Portugal, Russia, Saudi Arabia, Singapore, South Korea, Switzerland, Taiwan (ROC), Tajikistan, United Kingdom, Uzbekistan.

‘கிரீன் லிஸ்ட்’ குறித்த கூடுதல் தகவல்களை www.visitabudhabi.com என்ற இணையதளத்தின் மூலம் காணலாம். மேலும், அனைத்து பயணநிலை குறித்தும், பிற புதுப்பித்தல் விவரங்கள் குறித்தும் DCT Abudhabi தொடர்ந்து வெளியிடும் என்று அறிவித்துள்ளது.