கல்வித்துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அமீரக அமைச்சர் அறிவிப்பு !
அமீரகத்தின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுக் கவுன்சிலின் தலைவரும் அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத் துறை அமைச்சருமான மாண்புமிகு ஷேக் அப்துல்லாஹ் பின் ஜாயித் அல் நஹ்யான் (Sheikh Abdullah bin Zayed Al Nahyan) நேற்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அவர் கூறினார்.
இதனால் இந்த ஆண்டின் முதற் காலாண்டில் அமீரகத்தில் வசிப்பவர்கள் பாதிப்பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அமீரக அரசின் திட்டம் மிகப்பெரும் வெற்றிபெரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், பள்ளிகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “சுகாதாரமான பள்ளி வளாகத்திற்கு நம் குழந்தைகள் வருவதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார்.