கத்தார் மற்றும் அமீரகம் இடையே மீண்டும் நல்லுறவு – வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடங்கும் சூழ்நிலை ஆரம்பம் !
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கத்தார் நாட்டுடன் சவுதி அரேபியா, அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நான்கு நாடுகளும் தனது நல்லுறவை முறித்து கொண்டது.
இந்த நாடுகள் ஜூன், 2017 ஆம் ஆண்டு முதல் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்தது. மேலும், அந்நாட்டு பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டு கத்தாரை முழுவதுமாக புறக்கணித்தன. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று கத்தாருக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் வான், நிலம் மற்றும் கடல் எல்லைகளை திறக்க ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
சவூதி அரேபியாவின் அல் உலா பகுதியில் நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் அமீரகத்தின் துணை தலைவர் மதிப்பிற்குரிய ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கத்தாருக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான வான், நிலம் மற்றும் கடல் எல்லை வழியாக மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்த கத்தாருடன் ஒரு வாரத்திற்குள் மீண்டும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடங்கப்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கர்காஷ் தெரிவித்துள்ளார்.