Saturday, October 18, 2025
National

துபாய்: மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்கான புதிய விதிமுறைகள் அறிவிப்பு !

ரமலானை முன்னிட்டு துபாய் முழுவதும் உள்ள மசூதிகளில் இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்துவதற்கான விதிமுறைகளை துபாய் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நிறுவனத்துறை வெளியிட்டுள்ளது. துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள்:

  • தொழுகையின் அழைப்பான அதான் கூறப்பட்டதிலிருந்து தொழுகை நடந்து முடியும் வரை மசூதிகள் திறந்தே இருக்கும்.
  • இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்த அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை மட்டுமே அனுமதி.
  • அதான் கூறப்பட்ட அடுத்த 5 நிமிடங்களில் இஷா தொழுகை ஆரம்பிக்கும்.
  • அதான் கூறப்பட்டதிலிருந்து கட்டாய சபை தொழுகை (Congregational Obligatory Prayer) நடந்து முடியும் வரை மசூதிகள் திறந்தே இருக்கும்.
  • இரண்டாவது முறை மற்றும் தனியாளாக தொழுகை நடத்தத் தடை.
  • பிரார்த்தனையாளர்கள் கூட்டமாக ஒன்றிணையத் தடை.
  • தொழுகை முடிந்தவுடன் அனைத்து மசூதிகளும் உடனடியாக மூடப்படவேண்டும்.
  • மசூதிகளுக்கு வெளியே உணவு மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கத் தடை.
  • நீண்ட நாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் மசூதிகளில் தொழுகை நடத்த மற்றும் கூட்டத்தில் பங்கேற்கத் தடை.

இதுபற்றி கூறிய துபாய் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கான துறையின் தலைமை இயக்குனர் ஹமாத் அல் ஷேக் அஹமது அல் ஷைபானி “சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் ரமலான் முழுவதும் மசூதிகள் ஒவ்வொரு நாளும் சுத்திகரிக்கப்படும். ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இரவு நடைபெறும் கியாம்-உல்-லைல் (Qiyam-ul-layl) தொழுகை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

மசூதிகளில் கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகள் நடைபெற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்கிறது. இருப்பினும் விருப்பமுள்ள நபர்கள் காணொளிக் காட்சி மூலமாக விரிவுரைகளில் பங்கேற்கலாம். தொழுகை நடத்துபவர்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலமாக குரான் ஓதுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்தார் மற்றும் அன்பளிப்பு டெண்ட், இப்தார் டேபிள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே அன்பளிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று ஷைபானி கூறினார்.