Monday, March 2, 2026
Discount CouponsNational

அமீரகம்: சுமார் 30,000 பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடி…ரமலானை முன்னிட்டு அமைச்சகம் அறிவிப்பு !

ரமலானை முன்னிட்டு 30,000 பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்க அமீரக நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் இத்தள்ளுபடி ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் காலத்தில் பயன்படும் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது. அமீரகம் முழுவதும் உள்ள 894 விற்பனை நிலையங்களில் இத்தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை அமைச்சகத்தின் போட்டி மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இயக்குனர் மர்வான் அல் ஸ்பூசி இதுகுறித்துப் கூறுகையில் “ரமலானை முன்னிட்டு பல்வேறு கோ-ஆப்ரேட்டிவ் மற்றும் விற்பனை நிலையங்கள் தள்ளுபடியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால் எங்களுடைய பங்குதாரர்களான கோ-ஆப்ரேட்டிவ் மற்றும் விற்பனை நிலையங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இத்தள்ளுபடித் திட்டத்தை அறிவித்துள்ளோம்” என்று கூறினார்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் சில விற்பனை நிலையங்கள் சுமார் 30,000 வரையிலான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஓப்பன் பேஸ்கட்கள் (Open Baskets) மூலம் தேவையான அளவு பெற்றுக்கொள்ளலாம். இதேபோல் இந்த விற்பனை நிலையங்களில் ரமலான் மாத தேவைக்கான பேஸ்கட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். விற்பனை நிலையங்கள் 50 மற்றும் 140 திர்ஹம்ஸ் மதிப்பில் தள்ளுபடியை வழங்க உள்ளன. ரமலான் முழுவதும் இத்தள்ளுபடி அமலில் இருக்கும்” என்று அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை பராமரித்து, சமூக பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.