Saturday, October 18, 2025
National

ஹயாத்-வாக்ஸ் (Hayat-Vax) எனப்படும் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கும் அமீரகம் !

அமீரகம் முதன்முதலில் உள்நாட்டில் ஹயாத்-வாக்ஸ் (Hayat-Vax) என்ற கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஒரு உள்ளூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹயாத் என்பதற்கு அரபியில் ‘வாழ்க்கை’ என்று பொருள்படும். அபுதாபியின் G42 மற்றும் சினோபார்ம் இடையே புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியால் தயாரிக்கப்படும் பிராந்தியத்தின் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி இதுவாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட ஹயாத்-வாக்ஸ் இதே சினோஃபார்ம் தடுப்பூசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு அறிக்கையில் இந்த கூட்டு நிறுவனம் ஏற்கனவே ஹயாத்-வாக்ஸை அதன் கூட்டாளியான ராஸ் அல் கைமாவை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான ஜூல்பருடன் (Julphar) இணைந்து தயாரித்து வருவதாக G42 வெளிப்படுத்தியுள்ளது.

G42 மற்றும் சினோபார்ம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தால் அமீரகத்தில் இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடங்குவதற்கு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.