Friday, October 17, 2025
National

செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை அனுப்பியது அமீரகத்தின் ஹோப் ப்ரோப் விண்கலம் !

அமீரகத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹோப் ப்ரோப் (Hope Probe) விண்கலம் செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அமீரகத்தின் தலைவர்கள் தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

அமீரகத்தின் பிரதமரும் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்ட செய்தியில், “செவ்வாய் கிரகத்திற்கு அரேபியர்களால் அனுப்பப்பட்ட முதல் விண்கலமான ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 25,000 கி.மீ தொலைவில் எடுத்த முதல் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அபுதாபியின் மகுட இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்ட பதிவில், “ஹோப் ப்ரோப் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை வெளியிட்டிருப்பது நமது வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும் என்றும் இது விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்றாக அமீரகத்தை முன்னேறச் செய்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

இச்செயல் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக இருக்கும் மற்றும் மனிதகுலத்திற்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

ஹோப் ப்ரோப் விண்கலம் கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இது ஏப்ரல் 2023 வரை 1TB க்கும் அதிகமான புதிய தரவை படம் பிடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும் என்றும் இதன் கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள 200 அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இலவசமாக பகிரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.