Thursday, October 16, 2025
PoliticsWorld

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை.. 4 பேர் பலி !

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டிட வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பெண் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் 3 பேர் கீழே விழுந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர். இதனால் இந்த வன்முறையில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஜோபிடன் வென்றதை டிரம்ப் ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு செய்து ஜோபிடன் வென்றார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். அது போல் வாஷிங்டன்னில் உள்ள கேபிட்டல் கட்டிடத்தில் காங்கிரஸின் கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தார்கள். எல்க்டோரல் காலேஜ் வாக்குளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பிடன் வெற்றியாளர் என கணிக்கப்படுவார். இதை தடுக்கும் வகையில் கேபிட்டல் வளாகத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

கேபிட்டல் கட்டிடத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது. அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் வன்முறையாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் 3 பேர் கீழே விழுந்து இறந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை விரட்ட கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இது போல் வரலாற்று காணாத அளவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை பலர் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.