எதிஹாட் ஏர்வேஸின் தினசரி விமான சேவை இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு மார்ச் முதல் ஆரம்பம் !
அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் திங்கட்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு தினசரி திட்டமிடப்பட்ட மற்றும் ஆண்டு முழுவதும் செயல்படும் விமான சேவையைத் தொடங்கப்போவதாகக் அறிவித்துள்ளது.
மார்ச் 28, 2021 முதல் அமல்படுத்தப்படும் இந்த புதிய சேவை, அமீரகம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான நேரடி வணிக சேவைக்கும் மற்றும் ஓய்வு விடுப்பு பெறும் பயணிகளுக்கும் ஒரு சிறந்த தேர்வாகவும், நல்ல வசதியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், இது அபுதாபிக்கு நேரடியாக உள்வரும் சுற்றுலாவை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அமீரகவாசிகள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேலின் வரலாற்றுத் தளங்கள், கடற்கரைகள், உணவகங்கள் மற்றும் இரவு வாழ்க்கை ஆகியவற்றைக் கண்டறியும் வாய்ப்பை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது.
சீனா, இந்தியா, தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட எதிஹாட் நெட்வொர்க்கில் உள்ள முக்கிய நுழைவாயில்களுடன் அபுதாபி வழியாக புறப்படுவதற்கு வசதியாக பயண நேரம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விமான சேவையைத் தொடங்குவது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்குவதையும், செப்டம்பர் 15 அன்று வாஷிங்டன் டி.சி.யில் அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே ஆபிரகாம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதையும் பின்பற்றக்கூடிய வகையில் உள்ளதாக அமைந்திருக்கிறது.
மேலும், ஒரு மாதத்திற்குப் பிறகு, 2020 அக்டோபர் 19 அன்று டெல் அவிவிலிருந்து வணிக ரீதியான பயணிகள் விமானத்தை இயக்கும் முதல் ஜி.சி.சி கேரியராக எதிஹாட் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“திட்டமிடப்பட்ட விமான சேவையைத் தொடங்குவது ஒரு வரலாற்று தருணம் மற்றும் இது இரு நாடுகளுக்கிடையில் மட்டுமல்லாமல் பிராந்தியத்திற்குள்ளும் அதற்கு அப்பாலும் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளில் எதிஹாட்டின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது” என்று எதிஹாட் ஏவியேஷன் குழுவின் தலைமை இயக்க அதிகாரி முஹம்மது அல் புளூக்கி ( Mohammad Al Bulooki) கூறினார்.