Friday, October 17, 2025
National

அமீரகத்தில் அதிகரிக்கும் கொரோனா: 70 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தல் !

அமீரகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அமீரகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது அபுதாபி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அபுதாபியின் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 70 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும், தடுப்பூசி போடாத ஊழியர்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனாவிற்கான PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பானது இன்று (பிப்ரவரி 7) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களும், நாள்பட்ட நோய் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் அமீரக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் அவசியம் வாரத்திற்கு ஒருமுறை PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கோல்டன் ஸ்டார் அல்லது E ஐகான்களை பெற்றவர்களுக்கு இந்த PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.