ஜப்பானில் நிலநடுக்கம்! ரயில்கள் நிறுத்தப்பட்டன… 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஜப்பானில் சனிக்கிழமை நள்ளிரவு 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஜன்னல்கள் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. மேலும், ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நிலச்சரிவையும் ஏற்படுத்தியது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கூறுகையில், இந்த நிலநடுக்கமானது கடந்த 2011 மார்ச் மாதம் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டு, உலகின் மோசமான அணு உலை பேரழிவையும் ஏற்படுத்தியதற்கு பின்னர் நடந்த கடுமையான நிலநடுக்கமாக நம்பப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் (மைல்) தொலைவில் உள்ள கட்டிடங்களை உலுக்கியது. இரவு 11:08 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மின்சாரத்தை இழந்தன. உள்ளூர் நேரப்படி (1408 GMT), ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் மின்சார சேவை மீட்டெடுக்கப்பட்டது.
இருப்பினும், பல ஆயிரம் வீடுகளில் தண்ணீர் இல்லாமல் குடியிருப்பாளர்கள் லாரிகளில் இருந்து தண்ணீரைப் பெறுவதற்காக பிளாஸ்டிக் குடங்களுடன் வரிசையாக நின்றனர். குறைந்தது 104 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் என்.எச்.கே (NHK) தேசிய தொலைக்காட்சி கூறியுள்ளது.
மேலும், ஜப்பானின் ரயில் தடங்களில் சேதம் ஏற்பட்டதால் வடக்கு ஜப்பானின் பெரும்பகுதிக்கு ஷிங்கன்சென் புல்லட் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
உலகின் மிக நில அதிர்வு செயலில் உள்ள பகுதிகளில் ஒன்றான ஜப்பானில் பூகம்பங்கள் ஏற்படுவது பொதுவானவை. உலகில் ரிக்டர் அளவில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 20 சதவீதம் ஜப்பானில் ஏற்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

