இந்தியா: 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV-C51 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்… இஸ்ரோ தகவல் !
இந்தியாவின் PSLV-C51 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு 19 செயற்கைகோள்களுடன் PSLV-C51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும், விவசாயம் சார்ந்த புவியியல் ஆய்வுக்காகவும் ‘அமேசானியா -1’ செயற்கைகோள் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் அமேசானியா -1 செயற்கைகோள், இந்தியாவின் சார்பில் 5 செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைகோள்கள் என மொத்தம் 19 செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ தலைவர் சிவன் மேலும் கூறுகையில், “PSLV-C51 ராக்கெட், அமேசானியா -1 செயற்கைக்கோளை இன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது என்ற செய்தியை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், பிரேசிலால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை ஏவுவதில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த சாதனைக்கான எனது மனமார்ந்த வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

