Saturday, October 18, 2025
National

துபாயில் பல பள்ளிகளைத் திறந்த GEMS பள்ளியின் நிறுவனர் மரியம்மா வர்கி காலமானார்…துபாய் ஆட்சியாளர் அஞ்சலி !

துபாயின் முதல் ஜெம்ஸ் பள்ளியினை நிறுவியவரான கேரளாவைச் சேர்ந்த 89 வயதான மரியம்மா வர்கி கடந்த புதன்கிழமை அன்று காலமானதாக அவரது மகன் சன்னி வர்கி தெரிவித்திருந்தார்.

மேடம் வர்கி என்று பலராலும் அழைக்கப்படும் இவரது மறைவிற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பதிவின் மூலமாக இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாய் ஆட்சியாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் , “1959 ஆம் ஆண்டு மரியம்மாவும் அவரது கணவரும் துபாய் வந்தனர். அமீரகத்திற்கு உள்ளேயும் அமீரகத்திற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்க பல பள்ளிகளைத் திறக்கும் அளவிற்கு அவர் கல்வியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மரியம்மா வர்கியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்ததோடு, ஆட்சியாளரின் இந்தப் பதிவிற்கு பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.

இந்நிலையில், மரியம்மா வர்கி அவர்களின் இறுதி சடங்குகள் அடுத்த திங்கட்கிழமை ஜெபல் அலி மார்த்தோமா தேவாலயத்தில் நடைபெறும் என்றும் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் இரங்கல் கூட்டம் நடைபெறும் என்றும் மேலும் அதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சன்னி வர்கி தெரிவித்துள்ளார்.