Saturday, October 18, 2025
National

அபுதாபி: ஒரு வருடம் வரை செல்லுபடியாகும் பார்க்கிங் திட்டங்கள் அறிமுகம் !

அபுதாபி இன்று முதல் ஒன்று, மூன்று, ஆறு மற்றும் 12 மாதங்களுக்கான வரையறுக்கப்பட்ட பார்க்கிங் திட்டங்களை (Limited-term Parking Permits) அறிமுகப்படுத்தியுள்ளது.

அபுதாபி மற்றும் அல் ஐனில் வாடிக்கையாளர்கள், தனிநபர்கள் மற்றும் பொது நிறுவனங்கள், கருப்பு மற்றும் நீல வண்ணப்பூச்சுடன் குறிக்கப்பட்ட நிலையான பொது பார்க்கிங் இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த இந்த அனுமதிகளைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணம் ஒரு மாதத்திற்கு Dh391, மூன்று மாதத்திற்கு Dh1,174, ஆறு மாதத்திற்கு Dh2,348 மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்த Dh4,695 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதிகளுக்கு வாகன ஓட்டிகள் ஆன்லைனில் www.itc.gov.ae என்ற முகவரியில் E-Services பகுதியில் விண்ணப்பிக்கலாம். மேலும், அவர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் வாகன பதிவு அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கூறுகையில், மவாகிஃப் (Mawaqif) அறிமுகப்படுத்திய இச்சேவையானது ஒரு மணிநேர மற்றும் தினசரி பார்க்கிங் கட்டணங்களைப் பற்றி கவலைப்படும் பொதுமக்களுக்கு மத்தியில் இது ஒரு எளிதான மற்றும் சிறந்த திட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

“இந்த அனுமதி நிலையான பார்க்கிங்கில் பயன்படுத்த மட்டுமே தகுதியுடையது, மேலும் குடியிருப்பாளர்கள், வில்லா பகுதிகள் அல்லது வெள்ளை மற்றும் நீல வண்ணப்பூச்சுடன் குறிக்கப்பட்ட பிரீமியம் பார்க்கிங் இடங்களில் பயன்படுத்த முடியாது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக, வெவ்வேறு நிறுவனங்கள், அஞ்சல் விநியோக நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்கான அனுமதிகளையும் பெறலாம்.