Monday, March 2, 2026
HealthNational

கொரோனா பரிசோதனை முடிவு பற்றி விவாதித்து வீடியோ வெளியிட்ட அபுதாபி மருத்துவரின் உரிமம் இடைநீக்கம் !

அபுதாபி மருத்துவர் ஒருவர் சட்டத்தை மீறும் வகையில் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் அவர் ஈடுபட்டதைப் பற்றி விவாதித்ததற்காகவும், அவரது நோய் எதிர்ப்பு சக்தி முடிவுகளை வீடியோ கிளிப்பில் வெளிப்படுத்தியதற்காகவும் அவருடைய உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது,

ரகசிய ஒப்பந்தத்தை மீறியதற்காக அபுதாபியின் சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவரின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அபுதாபி சுகாதாரத் துறை (DoH) தெரிவித்துள்ளது.

மேலும், “இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது அமீரக சட்டங்களையும், ரகசியத்தன்மை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளையும் மீறுகிறது” என்று DoH ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கடுமையான சுகாதார நடைமுறைகள் மற்றும் சர்வதேச நெறிமுறைகளின்படி மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியையும் போலவே, அனைத்து மருத்துவ சோதனை பங்கேற்பாளர்களும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டன, இதில் 120 வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த 31,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

செப்டம்பரில் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவசர ஒப்புதல் அளித்தது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அதிக ஆபத்து உள்ள முன்னணி நபர்களுக்கு இது வழங்கப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து உள்ளவர்கள் (Royals), உயர் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற வகை தொழிலாளர்களும் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.