ஓமான்: மீண்டும் ஊரடங்கு – கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை !
ஓமான் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓமான் நாட்டின் அதிகாரபூர்வ ஊடக அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஓமான் நாட்டில் வரும் அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையிலான நாட்களில் இரவு நேரத்தடை அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இரவில் கடைகள் மற்றும் பொது இடங்களை மூடுவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் ஓமான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நாளை மறுதினம் முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்த இரவு நேர இயக்க கட்டுப்பாடுகள் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும், மேலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் ஓமான் நாட்டின் கடற்கரைகளும் மூடப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.