சவூதி அரேபியாவில் கடுமையான மணல் புயல்..தெரு விளக்குகள், மின்கம்பங்கள் சாய்ந்தன !!
சவுதி அரேபியாவின் பல பகுதிகளை சூழ்ந்து மணல் புயல் வீசியது. எதிரில் உள்ளவற்றை கூட பார்க்கமுடியாத அளவிற்கு மிகக் கடுமையாக இருந்தது மட்டுமில்லாமல் வானிலை எச்சரிக்கையை வெளியிடும் அளவிற்கு இருந்தது என்று அல் அரேபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவூதி பிரஸ் ஏஜென்சி (SPA) கூறுகையில், “அல் ஜவ்ஃப், தலைநகர் ரியாத், காசிம், ஹெயில், அத்துடன் மக்கா மற்றும் மதீனாவின் கிழக்குப் பகுதிகள் உட்பட நாட்டின் வடக்குப் பகுதியில் ஒரு புழுதி புயல் வீசியது” என்று அறிவித்துள்ளது.
சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் தெருவிளக்குகள் மற்றும் மின் கம்பங்கள் பலத்த புழுதிக் காற்று வீசியதில் சாய்ந்து இருப்பதை காண முடிகிறது.
மற்றொரு வீடியோ பதிவில், வடக்கு எல்லைகள் மாகாணத்தில் தூசி மூடிய பிரகாசமான சிவப்பு நிற மேகக்கூட்டத்தை உண்டாக்கி பார்வைக்கு முற்றிலும் இடையூறாக இருப்பதை காண முடிகிறது.
பெரும்பகுதிகளில் மணல் புயல் வீசியதால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் வெளியில் வரக்கூடாது என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் சவூதி சிவில் பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தெருவில் விளக்குகள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் அருகே வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

