நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான விமான டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் – தூதரகம் அறிவிப்பு.!
அமீரகத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்பொழுது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணியில் இருந்து துவங்குவதாக துபாயில் உள்ள இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் வரை இயக்கப்படும் விமானங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது மீண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதி வரையிலும் சர்வதேச விமானப் போக்குவரத்து இந்தியாவில் மீண்டும் தொடங்கப்படாது என்பது உறுதியாகத் தெரிகின்றது.
மேலும், அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏர் பபுள் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால், அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்புவோர் தூதரகத்தில் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், அமீரகத்தில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகள் கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.