Monday, March 2, 2026
National

புதிய கொரோனா விதிமுறைகள் ஏப்ரல் 8 வரை நீட்டிப்பு… ராஸ்-அல்-கைமா (RAK) அரசு அறிவிப்பு !!

ராஸ்-அல்-கைமாவில் (RAK) சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு விதிகளை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. அமீரகத்தின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இந்த புதிய விதிகள் ஏப்ரல் 8 வரை அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.

இப்புதிய விதிமுறைகளின்படி, ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் மால்களுக்கு அங்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அவர்களின் மொத்த திறனில் அதிகபட்சமாக 60 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

பூங்காக்கள் மற்றும் பொதுமக்களுக்கான கடற்கரை பொழுதுபோக்குக்கு 70 சதவீதம் அனுமதி.

பொது போக்குவரத்து, சினிமா திரையரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், நீச்சல்குளங்கள், ஹோட்டல்களில் உள்ள நீச்சல்குளங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களைப் பொறுத்தவரை 50 சதவீதம் மட்டுமே அனுமதி.

திருமணங்களில் கலந்து கொள்ள அதிகபட்சம் 10 குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி என்றும் அதே நேரத்தில் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள 20 உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் இரண்டு மேஜைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரம் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும், ஒரே குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் ஒரே மேஜையில் உட்கார அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடுத்து, பார்வையாளர்கள் தங்களுக்கிடையில் இரண்டு மீட்டர் இடைவெளி தூரத்தை பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், நோய் பரவுவதைத் தடுக்க முகமூடி அணிவதுடன் பிற முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.