Friday, October 17, 2025
National

அஜ்மான்: அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு !

அஜ்மானில் ஞாயிற்றுக்கிழமை புதிய கொரோனா சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அஜ்மானின் மகுட இளவரசரும், அஜ்மான் செயற்குழுத் தலைவருமான ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புதிய மருத்துவமனையைத் திறப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் மருத்துவமனைக்கு சுற்றுப்பயணம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அபுதாபியின் மகுட இளவரசரும், அமீரகத்தின் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் அமீரகத்தில் ஏழு கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“இம்மருத்துவமனைகளில் மொத்தம் 2,058 படுக்கைகள் இருக்கும், அவற்றில் 292 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை வழங்க முடியும்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.