கொரோனா நோய்த்தொற்றை பரப்பினால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை! சவூதி அரேபியா எச்சரிக்கை!
கொரோனா நோய்த்தொற்றை வேண்டுமென்றே பரப்புவது ஒரு “குற்றம்” என்று சவூதி அதிகாரிகள் கூறியுள்ளனர், வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தீவிரமாக முயன்று வருவதால் விதிகளை மீறி நோய்த்தொற்றை பரப்புவோருக்கு கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 5 லட்சம் ரியால் அபராதமும் விதிக்கப்படும் என்று சவூதி பொது வழக்குத்துறை எச்சரித்துள்ளது. மேலும், குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வோருக்கு இரட்டை அபாரதங்கள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவர்கள் சவூதியிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்றும் மீண்டும் அவர்கள் சவூதிக்கு நுழையத் தடை விதிக்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. “கொரோனா வைரஸ் தொற்றுநோயை வேண்டுமென்றே பரப்புவது ஒரு குற்றமாக கருதப்படுகிறது,” என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
COVID-19 க்கு எதிராக டிசம்பர் 17 ஆம் தேதி சவூதி அரேபியா தீவிரமாக தடுப்பூசிகளை போடும் பணியைத் தொடங்கியது. குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. சமீபத்திய மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் இயங்கும் 587 தடுப்பூசி மையங்களில் கிட்டத்தட்ட 8 மில்லியன் அளவிலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
சவூதியில் மொத்தம் 4,10,191 கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 6,878 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.